அரசியல்

"மின்மினிப் பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது"- விஜயை மறைமுகமாக சாடிய செல்லூர் ராஜூ!

மின்மினிப் பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது என்று விஜயை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக சாடியுள்ளார்.


Sellur Raju and Vijay
புத்தாண்டை முன்னிட்டு, உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இன்று சாமி தரிசனம் செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் குறித்தும், நடிகர் விஜய்யின் கட்சி குறித்தும் காட்டமான கருத்துக்களைத் தெரிவித்தார்.

"மின்மினிப் பூச்சிகள் வெளிச்சம் தராது"

செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்ததாகத் தெரிவித்தார். "தமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும், போதை கலாச்சாரம் இருக்கக் கூடாது. குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாதுகாப்பு இருக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி, சமமான ஆட்சி, உண்மையான ஆட்சி அமைய வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார். மேலும், "மின்மினிப் பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது. உண்மையான வெளிச்சத்தை எடப்பாடி பழனிசாமிதான் தருவார்" என்று கூறினார்.

"சினிமா கவர்ச்சிக்கு கூட்டம் கூடும்"

நடிகர் விஜய்யின் கட்சிக்கு அதிகளவில் கூட்டம் கூடுகிறதே என்பது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த செல்லூர் ராஜூ, "சினிமா கவர்ச்சிக்கு எப்போதுமே கூட்டம் கூடும். அமிதாப் பச்சன் வந்தால் கூடக் கூட்டம் கூடும். ஆனால், களத்தில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் யாருக்கு யார் போட்டி என்று. அதனால் யார் நாட்டை ஆள வேண்டும் என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும். சினிமா கவர்ச்சியை மட்டும் வைத்து அரசியல் வெற்றியைத் தீர்மானிக்க முடியாது என்று அவர் பதிலளித்தார்.