அரசியல்

ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள்: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தனித்தனியாக அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனியே அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள்: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தனித்தனியாக அஞ்சலி!
EPS OPS pay separate tributes
மறைந்த முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

6 முறை தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்த ஜெயலலிதா, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது 9-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று காலை 10.45 மணியளவில் எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதிமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கருப்புச் சட்டை அணிந்து வந்து பங்கேற்றனர். மரியாதை செலுத்திய பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நடிகை கவுதமியின் மற்றும் ஓ.பி.எஸ் மரியாதை

அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி, காலை 9 மணிக்கே ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை தந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி 10 மணிக்கு மேல் வரக்கூடும் என்பதால், அவரால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி நினைவிடம் வந்தபோது கவுதமி அங்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி கிளம்பிச் சென்ற பிறகு, நடிகை கவுதமி தனியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனியாக மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை தந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டி

மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைந்த அதிமுக என்பதுதான் தொண்டர்களின் பலம் என்றும், பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதற்காகத் தான் அமித்ஷாவைச் சந்தித்தேன் என்றும் குறிப்பிட்டார். தான் எப்போதும், எந்த இடத்திலும் புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லவில்லை என்றும், தவெகவில் இணைந்த பிறகு செங்கோட்டையன் உடன் பேசவில்லை என்றும் அவர் கூறினார்.