அரசியல்

கரூர் சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வரின் உரைக்கு பதிலடி கொடுப்பேன்- விஜய் ஆவேசம்!

"கரூர் சம்பவம் கரூர் சம்பவம் குறித்துச் சட்டப்பேரவையில் முதல்வர் வன்மத்துடன் பேசியிருக்கிறார்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வரின் உரைக்கு பதிலடி கொடுப்பேன்- விஜய் ஆவேசம்!
TVK Vijay
கரூரில் நடந்த மக்கள் சந்திப்புக் கூட்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்து 40 நாட்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கும் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று (நவம்பர் 5) அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கரூர் சம்பவம் தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் பதிலடி கொடுத்துப் பேசினார்.

'முதல்வர் வன்மத்துடன் பேசியிருக்கிறார்'

கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், "கரூர் கூட்டத்தில் நமது குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனைகளிலும், வலியிலும் இவ்வளவு நாட்கள் இருந்தோம்" என்றார். கரூர் சம்பவம் குறித்துச் சட்டமன்றத்தில் முதல்வர் ஆற்றிய உரையைக் கடுமையாக விமர்சித்த விஜய், அந்தப் பேச்சுக்குத் தாம் பதிலடி கொடுப்பதாக தெரிவித்தார். "பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசும் முதலமைச்சர், பேரவையில் நமக்கு எதிராக வன்மத்தைக் கக்கியுள்ளார்.

கரூர் சம்பவம் குறித்துச் சட்டப்பேரவையில் முதல்வர் வன்மத்துடன் பேசியிருக்கிறார். அதே சட்டப்பேரவையில் த.வெ.க.வுக்கு எதிரான உரைக்கு பதிலடி கொடுக்க விரும்புகிறேன்" என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

அரசின் மீது கேள்விகள்

தங்கள் கட்சியின் பரப்புரைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

"பரப்புரைக்கு இந்தியாவில் யாருக்கும் கொடுக்காத கட்டுப்பாடுகளை எங்களுக்குக் கொடுத்தார்கள். நாங்கள் மக்களுக்கு வசதியாக ஒரு இடம் கேட்டால், அவர்கள் நெருக்கடியான ஒரு இடத்தைக் கொடுப்பார்கள். இது வாடிக்கையாகவே இருந்தது. இந்தியாவில் எந்தக் கட்சிக்கும் விதிக்காத விதிமுறைகளையெல்லாம் எங்களுக்கு விதித்தார்கள்.

நம்மைப் பற்றி விமர்சிக்கும் நேர்மையற்ற குறுகிய மனம் கொண்ட முதல்வருக்குச் சில கேள்விகள். இந்த கபட நாடக தி.மு.க. அரசின் பொய்களை வாதிட முடியாமல் கோடிகளைக் கொட்டி அமர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் திக்குமுக்காடி நின்றதை முதல்வர் அறியவில்லையா?

அவசர அவசரமாகத் தனி நபர் ஆணையம் அமைத்தார்கள். அதை அவமதிப்பதைப் போலப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பொய் கூறினார்கள். 50 வருடமாகப் பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய முதல்வர் சட்டமன்றத்தில் பேசியது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய் என்பதை நான் சொல்லவில்லை; நீதிமன்றம் சொல்லியிருக்கிறது" என்றார்.

2026-இல் தி.மு.க.வுடன் நேரடிப் போட்டி

இறுதியாக, "த.வெ.க.வுக்கு வந்துள்ள இடையூறு வெறும் தற்காலிகம் தான்; நாங்கள் தடம் மாற மாட்டோம்," என்று உறுதிபடக் கூறிய விஜய், "2026-இல் த.வெ.க.வுக்கும் - தி.மு.க.வுக்கும் இடையே தான் போட்டி; நல்லதே நடக்கும்," என்று தெரிவித்துத் தனது பேச்சை முடித்தார்.