அரசியல்

கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு.. பழனிவேல் தியாகராஜனுக்கு ப்ரோமேஷன்!

கடந்த சில வருடங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, கனிமொழி தலைமையிலான தேர்தல் தயாரிப்பு குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது திமுகவினர் இடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு.. பழனிவேல் தியாகராஜனுக்கு ப்ரோமேஷன்!
Election manifesto committee headed by Kanimozhi
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைமை தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய ஐ.டி. துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் (பி.டி.ஆர்.) இடம்பெற்றிருப்பது கட்சி வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் அமைப்பு

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில், முக்கிய உறுப்பினர்களாக டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர்கள் கோவி செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வு உள்படப் பல்வேறு பணிகளிலும் தி.மு.க. தலைமை இப்போதே தயாராகி வருகிறது.

பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கியத்துவம்

முன்னதாக, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்தபோது எழுந்த சில விமர்சனங்கள் காரணமாக அவர் ஐ.டி. துறைக்கு மாற்றப்பட்டு, முக்கியத்துவம் குறைக்கப்பட்டார் என்று கருதப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய பி.டி.ஆர்., "ஐ.டி. துறைக்கு நிதியும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல எல்லா தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களும் எங்கள் தொழில்நுட்பத் துறையில் செயல்படுவதில்லை" என்று வெளிப்படையாகப் பேசியது பேசுபொருளானது. இதையடுத்து, சில நாட்கள் இடைவெளியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "உங்கள் சொல்லாற்றல் பலமாக இருக்க வேண்டும், பலவீனமாக இருக்கக் கூடாது" என்று அவருக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

இந்தச் சூழலில், கடந்த சில ஆண்டுகளாகக் கட்சி மற்றும் ஆட்சி என இரண்டிலும் முக்கியத்துவம் இல்லாமல் இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு, அடுத்த ஆண்டு தேர்தலுக்கான மிக முக்கியமான பணியான அறிக்கை தயாரிப்புக் குழுவில் தி.மு.க. தலைமை இடம் கொடுத்திருப்பது, அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதைக் காட்டுவதாக தி.மு.க.வினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்எல்ஏ எழிலரசன் கல்தா

2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் இடம் பெற்றிருந்தார். 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை குழுவில் எம்எல்ஏ எழிலரசனுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், தேர்தல் அறிக்கை குழுவிலும் எழிலரசன் இடம் பெறவில்லை, 2026 சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கு மீண்டும் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு அளிப்பதில் சந்தேகம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.