அரசியல்

திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

"எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழலில், மீண்டும் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!
O.Panneer selvam
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவாலயத்தில் நடைபெற்ற குருபூஜையை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலை மற்றும் அ.தி.மு.க. உட்கட்சிப் பிரச்னை குறித்துப் பேசினார்.

'திமுக ஆட்சிக்கு வரும்'

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழ்நிலை நீடித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். யாருடைய அரசியல் வாழ்க்கையும் பிரகாசமாக இருப்பது என்பது மக்களின் கையில் தான் உள்ளது.

தொடர்ந்தது அதிமுக உட்கட்சிப் பூசல் குறித்துப் பேசிய ஓபிஎஸ், அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பதே தமது முதன்மையான நோக்கம் என்று கூறினார்.

பொதுச்செயலாளர் தேர்வு முறை

மேலும் அவர், "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வைத் தொடங்கும்போது, தொண்டர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சட்டவிதியைக் கொண்டு வந்தார். இதை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது என்றும் சட்டவிதியை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி, 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்தால் போதுமென்று சட்டத் திருத்தம் செய்துள்ளார்" என்றார்.

வழக்கு விசாரணை

எடப்பாடி பழனிசாமியின் இந்தச் சட்ட திருத்தத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தற்போது சென்னை சிவில் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், அந்த வழக்கில் சாதகமான இறுதித் தீர்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.