அரசியல்

'சார்' என்றாலே திமுகவினருக்கு அலர்ஜி.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

"அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் இருந்து திமுகவுக்கு சார் என்றாலே ஒரு அலர்ஜி" என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

'சார்' என்றாலே திமுகவினருக்கு அலர்ஜி.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
Nainar Nagendran
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துப் பேசினார்.

தி.மு.க.வுக்கு 'சார்' என்றாலே அலர்ஜி

"தி.மு.க.வினருக்கு அண்ணா பல்கலைக்கழகச் சம்பவத்தில் இருந்து 'சார்' என்றாலே ஒரு அலர்ஜி. தற்போது வந்துள்ள 'சாரால்' (S.I.R) அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வினர் நடுக்கத்தில் உள்ளனர். "முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் இருந்தே வாக்காளர் பட்டியலில் விடுப்பு, சேர்ப்பு, இறந்தவர்கள் பெயரை நீக்குவது போன்ற திருத்தப் பணிகள் நடந்துதான் வருகிறது.

பீகார் மாநிலத்தில் 60 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 28 லட்சம் பேர் இறந்தவர்கள், மற்றவர்கள் குடிபெயர்ந்தவர்கள். ஆனால், தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் வாக்குகள் அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் பார்த்து அவர்கள் (தி.மு.க.) பயத்தில் உள்ளனர்" என்றார்.

பயத்தில் திமுக அமைச்சர்கள்

"தி.மு.க. அமைச்சர்கள், தாங்கள் பொய்யாகச் சேர்த்த வாக்காளர்களைப் பட்டியலில் நீக்கி விடுவார்களோ, அதனால் தங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற பயத்தில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் வாக்காளர் பட்டியல் குறித்துப் பொய்யான தகவலைக் கூறி வருகிறார்கள்" என்றார்.

மேலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஈடுபடுவது தமிழக அரசு அதிகாரிகள் தான் என்று குறிப்பிட்டு, பிறகு ஏன் திமுகவினர் பயப்பட வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

தவெக நிவாரண நிதி குறித்துக் கருத்து

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவிப் பணத்தை பெண் ஒருவர் திருப்பி அனுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "சிலர் பணம் வாங்குவார்கள். சிலர் அதை விருப்பப்பட மாட்டார்கள். எனவே விருப்பமில்லாதவர்கள் அதைத் திருப்பி அனுப்பியுள்ளனர்" என்றார்.