அரசியல்

அதிமுக அரசியலில் பரபரப்பு: ஓபிஎஸ்-ஸுடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம்!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.

அதிமுக அரசியலில் பரபரப்பு: ஓபிஎஸ்-ஸுடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம்!
OPS and Sengottaiyan
அண்மையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்ட செங்கோட்டையன், இன்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வதுடன் ஒரே காரில் பசும்பொன் நோக்கிப் பயணம் செய்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இபிஎஸ் vs செங்கோட்டையன்

அ.தி.மு.க.-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் செங்கோட்டையன் பகிரங்கமாக முன்வைத்தார். இதற்காக அவர் எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு விதித்திருந்தார். செங்கோட்டையன் கெடு விதித்த மறுநாளே, அவரது கட்சிப் பொறுப்புகள் எடப்பாடி பழனிசாமி தரப்பால் பறிக்கப்பட்டன.

இந்தச் சூழலில், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரைச் செங்கோட்டையன் சந்தித்ததாக வெளியான தகவல்களை அவர் மறுத்திருந்தார்.

ஓபிஎஸ்-ஸுடன் ஒரே காரில் பயணம்

இந்தச் சூழ்நிலையில், முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக, செங்கோட்டையன் இன்று மதுரையிலிருந்து ஓ. பன்னீர் செல்வதுடன் ஒரே காரில் பயணம் செய்துள்ளார். மேலும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுடன் காரில் பயணிக்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அவர் காரில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்ட சில நாட்களிலேயே செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து பொதுநிகழ்ச்சிக்கு ஒரே காரில் பயணித்தது, அ.தி.மு.க. அரசியல் நகர்வுகளில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.