அரசியல்

"விரைவில் மெகா கூட்டணி அமையும்"- அன்புமணி ஆருடம்!

விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்பதாகவும் வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.


Anbumani
மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்னை விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுக அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும், வரவிருக்கும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

'மெகா கூட்டணி அமையும்'

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேசிக்கொண்டு இருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்போம். இன்று கூட்டணி குறித்து எதுவும் பேச முடியாது. பெரிய கூட்டணி, பலமான கூட்டணி, மெகா கூட்டணி அமையும். எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்" என்றார்.

திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள்

மேலும் அவர், "தமிழ்நாட்டில் அன்றாடம் பல வகையான போராட்டங்கள் தி.மு.க. அரசை எதிர்த்து நடைபெறுகிறது. ஒரு பக்கம் ஆசிரியர்கள், இளநிலை உதவி பேராசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிராக ஒரு பக்கம் போராடுகிறார்கள். இப்படி தமிழ்நாட்டில் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள். தி.மு.க. மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். அனைவரும் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள்" என தெரிவித்தார்.

'முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார்'

தமிழகத்தில் தொழில் முதலீடு வந்து விட்டதாக பொய்யான தகவலை தி.மு.க. அரசு பரப்பி வருகிறது. நான் அது தொடர்பாக ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறேன். 34 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி கிடைத்து உள்ளது என்று பொய்யை முதல்வர் ஸ்டாலின் சொல்லி வந்தார். தற்போது புத்தகம் போட்டவுடன் வாயை திறக்கவில்லை. 8.8 சதவீதம் தான் தொழில் முதலீடு வந்துள்ளது. ரூ.ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடிக்கு தான் ஒப்புதல் கொடுத்து உள்ளார்கள். ஆனால் தி.மு.க.வினர் பொய் சொல்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்" என்று வலியுறுத்தினார்.