இந்தியா

டெல்லியில் 6 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்.. என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் 6 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்.. என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
Shocking information in the NIA investigation
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட டாக்டர்களிடம் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பயங்கரவாதக் கும்பல் ஒன்று டிசம்பர் 6 அன்று டெல்லியில் 6 இடங்களில் ஒருங்கிணைந்த தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்தது குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிச.6 தாக்குதல் நடத்த திட்டம்

கைது செய்யப்பட்ட இந்த டாக்டர்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ஆம் தேதியையே இந்தத் தாக்குதல்களுக்குத் தேர்ந்தெடுக்க இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பழிவாங்க ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அதற்கேற்ப இந்தத் தாக்குதலை நிகழ்த்த அவர்கள் 5 கட்டங்களாகத் திட்டம் தீட்டிச் செயல்பட்டு வந்தது அம்பலமாகி உள்ளது.

ஐந்து கட்டத் தாக்குதல் வடிவமைப்பு

பயங்கரவாதக் குழு உருவாக்கம்: ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாதத் தொகுதியை உருவாக்குவது.

மூலப்பொருட்கள் திரட்டுதல்: மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை (IEDs) ஒன்றுசேர்ப்பதற்கும், வெடிமருந்துகளைத் தயாரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களை அரியானாவில் உள்ள நூஹ் மற்றும் குருகிராம் போன்ற இடங்களில் இருந்து வாங்குவது.

ஆபத்தான உற்பத்தி மற்றும் உளவு: ஆபத்தான இரசாயன வெடிபொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் தாக்குதல் நடத்தச் சாத்தியமான இலக்கு இடங்களை உளவு பார்த்தல்.

குண்டுகள் விநியோகம்: உளவு பார்த்த பிறகுத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளைக் குழு உறுப்பினர்களிடையே விநியோகிப்பது.

தாக்குதல் நிறைவேற்றம்: இறுதியாக, டெல்லியில் 6 முதல் 7 இடங்களில் ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகளைச் செயல்படுத்துவது.

முறியடிக்கப்பட்ட சதி மற்றும் தற்கொலைத் தாக்குதல்

இவர்களின் அசல் திட்டம் கடந்த ஆகஸ்டு மாதத்திலேயே தாக்குதல்களை நடத்துவதாக இருந்துள்ளது. இதற்காகச் செங்கோட்டையைச் சுற்றி உளவு பார்த்துள்ளனர். ஆனால், தீவிர ரோந்து பணியால் அந்தச் சதிச்செயல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகுதான் டிசம்பர் 6-ஆம் தேதி தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டு, வெடிபொருட்களைச் சேமித்து வந்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் அவர்களின் வெடிபொருட்களைக் கைப்பற்றிச் சதித்திட்டத்தை முறியடித்துள்ளனர்.

இந்த ஆத்திரத்தில், இந்தக் குழுவைச் சேர்ந்த டாக்டர் உமர் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.