இந்தியா

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: ஜனவரி 31-ல் மீண்டும் கூடுகிறது!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை நிறைவடைந்தது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: ஜனவரி 31-ல் மீண்டும் கூடுகிறது!
Parliament winter session concludes
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை நிறைவடைந்தது. இந்தத் தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதோடு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்களும் நடைபெற்றன.

முக்கிய விவாதங்களும் அரசியல் பங்கேற்பும்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி இரு அவைகளிலும் தொடங்கியது. இந்தத் தொடரில், தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' 150 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் விவாதம் நடத்தப்பட்டது. மேலும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கிடையே, வாக்காளர் தீவிரத் திருத்தம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

நிறைவேற்றப்பட்ட முக்கியச் சட்ட மசோதாக்கள்

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்றியமைக்க வகைசெய்யும் ‘வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ (VB-GRAMG) சட்ட மசோதா மற்றும் அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க வகைசெய்யும் சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் தற்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விரைவில் சட்டங்களாகவுள்ளன.

அடுத்த கூட்டத்தொடர் தேதி

குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக பட்ஜெட் கூட்டத்தொடருக்காக அடுத்தாண்டு ஜனவரி 31-ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.