இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!
Karur Stampede
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு தொடர்பாக, தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

விசாரணையின் பின்னணி

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தற்போது கரூரில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு இந்த விசாரணையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தலைமை அலுவலகத்தில் ஆஜரான நிர்வாகிகள்

விசாரணை அடுத்த கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு இன்று (டிசம்பர் 29) விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி, இன்று ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகினர்.

நீண்ட நேர விசாரணைக்குத் திட்டம்

கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள், நிகழ்ச்சி ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆஜரான நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணை இன்று முழுவதும் நீடிக்கும் என சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.