இந்தியா

பொது இடத்தில் குப்பை கொட்டினால் வீட்டு வாசலில் கொட்டுவோம்: பெங்களூரில் புதிய நடவடிக்கை!

பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களின் வீட்டின் முன்னாலேயே அந்தக் குப்பையைக் கொட்டியதுடன், அபராதமும் விதித்துள்ளது பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம்.

பொது இடத்தில் குப்பை கொட்டினால் வீட்டு வாசலில் கொட்டுவோம்: பெங்களூரில் புதிய நடவடிக்கை!
Bengaluru Solid Waste Management Limited
பொது இடங்களில் குப்பையைக் கொட்டி நகரை அசுத்தப்படுத்தும் பொதுமக்களுக்குப் பாடம் புகட்டும் வகையில், பெங்களூரு திடக்கழிவு நிர்வகிப்பு லிமிடெட் (BSWML) அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களின் வீட்டின் முன்னாலேயே அந்தக் குப்பையைக் கொட்டியதுடன், அபராதமும் விதித்துள்ளனர்.

தீர்வு காண முடியாத குப்பை பிரச்னை

பெங்களூரில் குப்பைப் பிரச்னை நீண்ட காலமாகத் தீர்வு காண முடியாத ஒன்றாக உள்ளது. பலர் பிளாஸ்டிக் கவர்களில் குப்பையை நிரப்பி, சாலை ஓரங்கள், காலி வீட்டுமனைகள், விளையாட்டு மைதானங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வீசுகின்றனர். இதனால் நகரின் சுற்றுச்சூழல் அசுத்தமாகிறது.

பொது இடங்களில் குப்பை கொட்ட வேண்டாம் என கிரேட்டர் பெங்களூரு ஆணையம் (GBA) அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயன் இல்லாததால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் உத்தரவு மற்றும் புதிய திட்டம்

இதுகுறித்து பி.எஸ்.டபிள்யூ.எம்.எல். நிர்வாக இயக்குநர் கரிகவுடா கூறியதாவது:

"குப்பை பிரச்சினை குறித்து பெங்களூரு நகர மேம்பாட்டு அமைச்சரும் துணை முதல்வருமான சிவகுமார் தலைமையில் ஆலோசனை நடந்தது. அப்போது அவர், பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஜி.பி.ஏ. கட்டுப்பாட்டில் இயங்கும் பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., 190 வார்டுகளில் 'குப்பை கொட்டும் உற்சவம்' என்ற பெயரில் இந்தத் திட்டத்தைத் துவக்கியுள்ளது.

வீடியோ பதிவு மூலம் நடவடிக்கை

பி.எஸ்.டபிள்யூ.எம்.எல். நியமித்துள்ள மார்ஷல்கள், பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை வீடியோ பதிவு செய்துள்ளனர். அவர்களின் வீடுகள் மற்றும் போன் எண்களைக் கண்காணித்துள்ளனர். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் குப்பை கொட்டுவோருக்கு எதிரான சாட்சியாகும்.

இதன் அடிப்படையில், பி.எஸ்.டபிள்யூ.எம்.எல். ஊழியர்கள் ஆட்டோவில் குப்பையைக் கொண்டு சென்று வீட்டு வாசலில் கொட்டியுள்ளனர்.

218 வீடுகளுக்கு அபராதம்

நேற்று பொது இடங்களில் குப்பை போட்ட 218 வீடுகள் அடையாளம் காணப்பட்டன. அந்தந்த வீடுகளின் முன் குப்பையைக் கொட்டி, பொது இடங்களில் குப்பை கொட்டக்கூடாது என எச்சரித்து அபராதம் விதிக்கப்பட்டது. இந்த 218 வீடுகளில் இருந்து ரூ. 2.80 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இனி யார் பொது இடங்களில் குப்பை கொட்டினாலும் இதே தண்டனை கிடைக்கும்" என்று நிர்வாக இயக்குநர் கரிகவுடா எச்சரித்துள்ளார்.