தமிழ்நாட்டில் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அமலில் இருக்கும் நிலையில், பீகாரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்றால், அங்குள்ள பள்ளிகளில் சத்தான காலை உணவுத் திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலை உணவுத் திட்டம்
தமிழ்நாட்டில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பீகார் என்டிஏ தேர்தல் அறிக்கை
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் இணைந்து 69 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு:
காலை உணவுத் திட்டம்: பீகார் பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு: ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
திறன் பயிற்சி: பீகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
பெண்கள் நலன்: பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
கல்வி: ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு KG முதல் PG வரை இலவச தரமான கல்வி வழங்கப்படும்.
உதவித்தொகை: உயர்கல்வி பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
விவசாயிகள் நலன்: விவசாயிகளுக்கு நிதியுதவி ரூ.6,000-ல் இருந்து ரூ.9,000-ஆக உயர்த்தப்படும்.
அடிப்படை வசதிகள்:
* 4 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கப்படும்.
* பீகாரில் ஏழு சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
* 10 புதிய தொழிற்துறைப் பூங்காக்கள், 7 விரைவுச் சாலைகள் அமைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
           LIVE 24 X 7
LIVE 24 X 7
               
               
               
               
 









 
  
  
  
  
  
 