முதலமைச்சரின் சிரிப்புக்குப் பின்னால் சதி
டெல்லியில் பேசிய ராகுல் காந்தி, "ஹரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக, முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி, பாஜக கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும், அதற்கான வேலைகளைச் செய்துவிட்டோம் எனச் சிரித்தபடியே கூறினார். அந்தச் சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.
போலி வாக்காளர்கள் குறித்த ஆதாரம்
நாட்டின் இளைஞர்கள், குறிப்பாக Gen Z தலைமுறையினர் நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். ஏனென்றால், உங்களது எதிர்காலத்தைப் பற்றித்தான் நான் பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காகத்தான் பேசுகிறேன்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் ஒரு தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 22 வாக்குகளை செலுத்தி இருக்கிறார். ஷிமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, விமலா என வெவ்வேறு பெயர்களில் இந்தப் பெண் வாக்களித்துள்ளார்.
பெண்மணி ஒருவர் இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார். இந்தப் பெண் நினைத்தால் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம்.
இதுபோல ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி மையங்களில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஒரே நபர்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு வயதில், வெவ்வேறு அடையாள அட்டைகள் மற்றும் வெவ்வேறு முகவரிகளில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நான் வெளியிடுகிறேன்.
தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு
நியாயமான தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
"இவ்வளவு போலி வாக்காளர்கள் இருந்தும், வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி காட்சிகளை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் அளித்திருக்கிறது. போலி வாக்காளர்களை நீக்குவதற்குத் தேர்தல் ஆணையம் தனிச் செயலி வைத்துள்ளது. அவர்களை நீக்கினால், நியாயமான தேர்தல் நடைபெறும் என்பதால் தேர்தல் ஆணையம் அதனைச் செய்யவில்லை.
இளைஞர்களுக்கு அழைப்பு
"இந்தியாவின் Gen Z மற்றும் இளைஞர்களுக்கு வாக்குத் திருட்டைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியது. உங்கள் எதிர்காலம் அழிக்கப்படுகிறது.
"இந்தியாவின் Gen Z மற்றும் இளைஞர்களுக்கு உண்மை மற்றும் அகிம்சையின் வழியில் நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் உள்ளது" என்றும் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









