சினிமா

"பொறுப்பற்ற மன்னிப்பை ஏற்க முடியாது"- யூடியூபருக்கு நடிகை கவுரி கிஷன் பதிலடி!

உடல் எடை குறித்த கேள்விக்காக வருத்தம் தெரிவித்த யூடியூபருக்கு நடிகை கவுரி கிஷன் பதிலடி கொடுத்துள்ளார்.


Actress Gauri Kishan
நடிகை கவுரி கிஷனின் உடல் எடை குறித்து யூடியூபர் ஒருவர் பொதுவெளியில் கேள்வி எழுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தற்போது அந்த யூடியூபர் வெளியிட்ட மன்னிப்பு வீடியோ குறித்தும் கவுரி கிஷன் காட்டமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

யூடியூபரின் கேள்வி & கவுரி கிஷன் பதிலடி

அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், யூடியூபர் ஒருவர் நடிகை கவுரி கிஷனின் உடல் எடை குறித்துக் கேள்வியெழுப்பினார். இக்கேள்விக்கு அப்போது பதிலளிக்காமல் கவுரி கிஷன் முகத்தைச் சுளித்தார்.

தொடர்ந்து, 'அதெர்ஸ்' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலின்போது அதே யூடியூபரைப் பார்த்த கவுரி கிஷன், "ஒரு நடிகையின் உடல் எடையைத் தெரிந்து வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? ஒருவரின் தோற்றத்தைக் குறித்த கேள்விகளை அனுமதிக்கக்கூடாது. நீங்கள் பத்திரிகையாளரே இல்லை. அத்துறைக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறீர்கள்," என பதிலடி கொடுத்தார்.

'பொறுப்பற்ற மன்னிப்பு, மன்னிப்பே அல்ல'

இதற்குப் பிறகு, அந்த யூடியூபர் வருத்தம் தெரிவிப்பதாகக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். தற்போது அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள கவுரி கிஷன், தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தி, "பொறுப்புணர்வில்லாத மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. முக்கியமாக, கவுரி கேள்வியைத் தவறாகப் புரிந்து கொண்டார்; அது ஜாலியான கேள்விதான்,' அல்லது அதைவிட மோசமாக, 'நான் யாரையும் உடல் ரீதியாக அவமதிக்கவில்லை' எனச் சொல்லி தட்டிக்கழிப்பதும் மிகப்பெரிய பிரச்னைதான்.

நான் தெளிவாகச் சொல்கிறேன். மேடைத்தனத்துடன் கூடிய போலி மன உறுதி அல்லது வெறும் வார்த்தைகளால் வெளிப்படும் மன்னிப்பை நான் ஏற்க மாட்டேன். சரியாக நடந்து கொள்ளுங்கள்," என கவுரி கிஷன் கூறியுள்ளார்.

நெட்டிசன்களின் கேள்வி

கவுரி கிஷனின் இந்தக் கருத்துக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வரும் அதேநேரம், அந்த யூடியூபர் தனது வீடியோவில் வருத்தம் தெரிவிப்பதாக மட்டுமே கூறுகிறார். அவர் ஏன் 'மன்னிப்பு' என்கிற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டாரா எனவும் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒரு பெண்ணின் தோற்றத்தைப் பற்றி பொதுவெளியில் கேள்வி எழுப்புவது உருவக்கேலியை ஊக்குவிப்பதாகவே என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.