உலகம்

WOW MOMENT ! கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு முத்தம் கொடுத்த UAE இளவரசர் !

விமானத்தில் உயிருக்கு ஆபத்தான தாக்குதல் நடந்தபோதும் துணிச்சலுடன் போராடி 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை UAE பட்டத்து இளவரசர் நேரில் சந்தித்து பாராட்டிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

WOW MOMENT ! கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு முத்தம் கொடுத்த UAE இளவரசர் !
UAE Prince Honoured Hero Pilot Smit Machchhar !

துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட ஃப்ளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தின்போது, காயமடைந்த நிலையிலும் விமானத்தின் கட்டுப்பாட்டை பாதுகாத்த இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சல் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, துணை விமானி ஒருவர் கேப்டன் ஸ்மித் மச்சாரை தாக்கியதாகவும், விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளை கைப்பற்ற முயன்றதாகவும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயத்தையும் பொருட்படுத்தாமல் போராடிய கேப்டன் :

விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட மோதலில் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும் அவர் விமானத்தின் கட்டுப்பாட்டை கைவிடாமல் தொடர்ந்து போராடியுள்ளார்.

ஒரு கட்டத்தில் காக்பிட் கதவைத் திறக்க முடிந்த நிலையில், விமான பணியாளர்கள், பயணிகள் மற்றும் பணியில் இல்லாத இரு விமானிகள் உள்ளிட்டோர் காக்பிட்டுக்குள் சென்று தாக்குதல் நடத்திய துணை விமானியை கட்டுப்படுத்த உதவியுள்ளனர்.

இதன் மூலம் விமானத்தை மீண்டும் பாதுகாப்பான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16,000 அடி உயரம் குறைந்த விமானம் :

இந்த சம்பவத்தின் போது விமானம் மிகக் குறுகிய காலத்தில் சுமார் 16,000 அடி உயரத்தை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்திற்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், விமானத்தை நிலைநிறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் விமானம் அவசரமாக சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 180 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்திய பைலட் :

சம்பவத்தில் காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்து நல்ல முறையில் குணமடைந்து வருவதாகவும், அவரது குடும்பத்தினருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்கு நேரில் சென்ற UAE பட்டத்து இளவரசர் :

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் துபாய் பட்டத்து இளவரசருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், கேப்டன் ஸ்மித் மச்சாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பைலட்டிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த ஷேக் ஹம்தான், விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.

நெற்றியில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய இளவரசர் :

கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலையும், மனித உயிர்களை பாதுகாக்க அவர் மேற்கொண்ட முயற்சியையும் ஷேக் ஹம்தான் பாராட்டினார்.

அப்போது அவரை அன்புடன் வாழ்த்தும் வகையில் அவரது நெற்றியில் முத்தமிட்டார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் ஷேக் ஹம்தான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"UAE அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை" :

தனது சமூக வலைதள பதிவில், கேப்டன் ஸ்மித் மச்சாரின் தைரியம், பொறுப்பு உணர்வு மற்றும் மனித உயிர்களின் மீதான அக்கறை ஆகியவற்றை ஷேக் ஹம்தான் பாராட்டியுள்ளார்.

மேலும், அவர் ஃப்ளைதுபாய் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கதையில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதிலும் பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கருணை, அமைதி மற்றும் மனித உயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மதிப்புகளுக்கு கேப்டன் ஸ்மித் மச்சாரின் செயல் எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தூதரகத்தின் பாராட்டு :

கேப்டன் ஸ்மித் மச்சாரின் உடல்நிலை குறித்து இந்திய தூதரகமும் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறது. அவர் சிறந்த மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், உடல்நிலை சீராக முன்னேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும், கேப்டன் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

துபாய் - டெல் அவிவ் விமானத்தில் ஏற்பட்ட இந்த பரபரப்பான சம்பவத்தின் போது, விமானத்தை பாதுகாப்பாக நிலைநிறுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் கேப்டன் ஸ்மித் மச்சாரின் பங்கு தற்போது பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.