ஆரம்பமான அமைச்சரவை கூட்டம்...சமூகநீதி கணக்கெடுப்பு ஆலோசனையா?

ஆரம்பமான அமைச்சரவை கூட்டம்...சமூகநீதி கணக்கெடுப்பு ஆலோசனையா?

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Author: Bhavani தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பது, அரசின் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

மேலும், அரசின் திட்டங்கள் எந்த அளவுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ளன, அவற்றை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

'வெற்றி தமிழகம்' திட்டம் குறித்து ஆலோசனை

தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டமான 'வெற்றி தமிழகம்' திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள 436 திட்டங்கள் மற்றும் இலக்குகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் துறைகள் வாரியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம், இலக்குகளை எட்டுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ரீதியான முடிவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுகிறது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்?

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான விவகாரமும் இந்தக் கூட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், திட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

விதி 110 அறிவிப்புகளின் நிலை என்ன?

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், விதி 110-ன் கீழ் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. அறிவிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

சமூகநீதி கணக்கெடுப்பு

மேலும் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்துவது உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டத்தின் முடிவில், தமிழ்நாடு அரசின் முக்கியத் திட்டங்கள் தொடர்பாகப் புதிய அறிவிப்புகள் அல்லது முடிவுகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.