அரசியல்

கல்குவாரி எதிர்ப்பு... 38 கிராம மக்கள் போராட்டம்! அமைச்சர் பிரபு சொன்னது என்ன?

சிவகங்கை சிங்கம்புணரியில் புதிய கல்குவாரிக்கு எதிராக 38 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் பிரபுவின் விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்குவாரி எதிர்ப்பு... 38 கிராம மக்கள் போராட்டம்! அமைச்சர் பிரபு சொன்னது என்ன?
கனிமவளத்துறை அமைச்சர் பிரபுவின் சொந்த மாவட்டமான சிவகங்கை அடுத்த சிங்கம்புணரியில் 38 கிராம மக்கள் ஒன்றுகூடி புதிதாக அமையவிருக்கும் கல்குவாரிக்கு எதிராக போராடிவருகிறார்கள். கூடவே, கல்குவாரிகளுக்கு ஆதரவாக அமைச்சர் பிரபு செயல்படுவதாக ஊர்மக்கள் கொந்தளிக்க, அவர்களின் பின்னணியில் வேறு சிலர் இருக்கிறார்கள் என அமைச்சர் கூறுவது, அவரது சொந்த மண்ணில் விவாதமாகியிருக்கிறது.

இதுகுறித்து சேர்ந்த வழக்கறிஞர் வேலாயுதம் நம்மிடம் பேசினார். "மதுரை சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மலம்பட்டி, கிருஷ்ணாபுரம், ஜெயங்கொண்டநிலை ஆகிய கிராமங்களில் சுமார் நூறு ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கி அதைச் சுற்றிலும் கம்பிவேலி அமைத்து கல்குவாரி அமைக்கும் பணி நடக்கிறது. ஜெயங்கொண்டநிலையைச்
இதனால் விவசாயப் பணிகள், கால்நடை மேய்ச்சல் உள்ளிட்டவை பாதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே இங்கு செயல்பட்ட கிரானைட் மற்றும் கல்குவாரிகளால் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இதுகுறித்து கனிமவளத்துறை அமைச்சர் பிரபு மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த ஜூலை 27ம் தேதி, கல்குவாரிக்கு ஆதரவாக ஜெயங்கொண்டநிலை கிராமத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்றார்கள்.

அதை கேள்விப்பட்டு நாங்கள்போய் தட்டிக்கேட்டபோது என் மீதும், விவசாயி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் மீதும், கல்குவாரி தரப்பைச் சேரந்த லெனின், சுப்ரமணியசிவா, பாரதி உள்ளிட்ட
சுமார் 20 பேர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து எங்களுக்கு நீதிகேட்டு கீழவளவு காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். குவாரிக்காரர்களுக்கு இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் ஆதரவாக இருக்கிறார். ஆரம்ப நிலையிலேயே இப்படி கொலைவெறி தாக்குதல் நடத்துபவர்கள், நாளை குவாரியை இயக்க ஆரம்பித்தால் எங்களை கொன்றேவிடுவார்கள்.

குவாரிகள் அமைப்பதற்கு ஆதரவாக இருக்கும் உஞ்சனையைச் சேர்ந்த ராமசாமி என்பவர், அமைச்சர் பிரபுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர். இந்த புதிய கல்குவாரிக்கும், அமைச்சர் பிரபுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். ஊர் பெரிய மனிதர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு குவாரிக்காரர்கள் பக்கம் சாய்ந்துவிட்டார்கள்.

இளைஞர்கள் நாங்கள் ஒன்று திரண்டதை பார்த்துதான் கிராம மக்கள் திரண்டிருக்கிறார்கள். 38 கிராம தலைவர்களும் ஒன்றுகூடி, மல்லாக்கோட்டையை சுற்றி இயங்கும் அனைத்து கிரஷர், கல் குவாரிகளையும் மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதை வலியுறுத்தி ஆகஸ்ட் 19ல் வடவன்பட்டியில் 38 கிராம மக்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்" என்றார்.மல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், “ஜெயங்கொண்டநிலை கிராமம் அருகே உள்ள 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தமல்லி கண்மாய் அருகேயும் குவாரி அமைக்கும் முயற்சி நடக்கிறது.

அது நிறைவேறினால், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதேபோல நைனாங்குளம் நீர்நிலையும் கல்குவாரியால் மாசுபடும். விவசாயம் முடங்கும். கண்மாய்க்குள் செல்லவேண்டிய மழைநீர் 45 மீட்டர் ஆழ குவாரிக்குள் தண்ணீர் சென்று விடும். எங்கள் ஊருக்கு நிலத்தடி நீர் இல்லாமல் நாங்கள் அகதிகளாக சொந்த கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகும்.

ஆகையால் எங்கள் பகுதிக்கு கல்குவாரி மற்றும் கிரஷருக்கு அனுமதி வழங்க வேண்டாம் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்றார். சமூக ஆர்வலரான வழக்கறிஞர் ஸ்டாலின் நம்மிடம், "கடந்தாண்டு மல்லாக்கோட்டையில்செயல்பட்ட மேகவர்ணம் என்பருக்கு சொந்தமான மேகா ப்ளூ மெட்டல் குவாரியில் கடந்த மே 20ம் தேதி பாறை சரிந்து ஏற்பட்ட பெரும் விபத்தில் அங்கு பணியாற்றிய ஆறு பேர் உயிரிழந்தனர். அதற்கு அரசு விதித்த அபராதம் மிகவும் சொற்பம். குவாரிக்கு ஆதரவாகவும் மக்களுக்கு பாதகமாகவும் அரசு நடந்துகொண்டது.

சிங்கம்புணரி மதுரை எல்லையில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குவாரி கிரஷர்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. நேர்மையான அதிகாரிகளாக இருந்தால் விதிமீறியிருக்கும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து அரசிற்கு வருவாய் ஈட்டிக்கொடுப்பார்கள். அதற்கு மாறாக தங்கள் பாக்கெட் நிரப்புவதால் மக்களை பற்றி அதிகாரிகள் கவலைப்படுவதில்லை. கடந்த ஆட்சியில் கனிமவளத்துறைக்கு மாவட்ட அதிகாரிகளாக வருவதற்கு பல லட்சங்களை கொடுத்து வந்தவர்கள் பலர் கோடீஸ்வர்களாகத்தான் சென்றிருக்கிறார்கள். அவர்கள் குவித்த சொத்துகள் விபரங்களைத் திரட்ட அவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்த வேண்டும்.

மதுரையில் மட்டும் பதிமூன்றாயிரம் கோடி அளவிற்கு அபராதம் விதித்து பல ஆண்டுகள் கடந்த பிறகும் அந்த பைல்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றன" என்றார் கனிமவளத்துறை அமைச்சர் பிரபுவிடம் கேட்டோம். "ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் கல்குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். அவர்களிடம் இந்த குவாரி செயல்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டேன். கடந்த தி.மு.க. ஆட்சியில் அவர்கள் அனுமதி வாங்கி யிருக்கிறார்கள். இளம்பரிதிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரை யார் என்றே எனக்குத் தெரியாது. குவாரி செயல்படாது என்று சொன்னபிறகும் போராட்டம் என்பது நியாயமல்ல. இதன் பின்னணியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். மக்கள் பாவம். அவர்களை சிலர் தூண்டிவிடுகிறார்கள் என்றார்.

என்ன செய்யப்போகிறது அரசு?