அரசியல்

"அண்ணன் கைக்கு பவர் வந்ததில் இருந்து தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது!" - சட்டப்பேரவையில் உதயநிதி ஆவேசம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை கடுமையாக விமர்சித்தார்.


அப்போது பேசிய அவர், "முதல்வர் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் அவரது பெரம்பூர் தொகுதியை தமிழ்நாட்டிலேயே நம்பர் 1 ஆக மாற்றிவிட்டார். ஆனால் அது வளர்ச்சியில் அல்ல, மின்வெட்டில் நம்பர் 1 ஆக உள்ளது. 'அண்ணன் பவருக்கு வந்தால் தமிழ்நாடு மாறும்' என்று நினைத்தோம். ஆனால், அண்ணன் கைக்கு பவர் வந்ததில் இருந்து தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது என்று மக்கள் பேசுகிறார்கள்" எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "தமிழ்நாட்டில் ஏற்படும் மின்வெட்டுக்கான காரணங்களை தினமும் விளக்கி வருகிறோம். மின்துறையில் ரூ.2.2 லட்சம் கோடி கடன் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை. இதுகுறித்து விரிவான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மேலும், 70 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பவும், பிரச்னைகளை தீர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த ஐந்து ஆண்டுகளில் சீரான மின் விநியோகத்திற்காக 393 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. 90 ஆயிரம் மின்மாற்றிகள் புதிதாக நிறுவப்பட்டதோடு, பழுதடைந்தவையும் சீரமைக்கப்பட்டன. தற்போது நடைபெற்று வரும் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான பல மின் திட்டங்களும் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்டவையே" என்று தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் பேசிய சிடிஆர் நிர்மல் குமார், "கடந்த ஆட்சியில் அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன. 90 ஆயிரம் மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "மின்வெட்டு காரணமாக தமிழ்நாடு இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுடன் மக்கள் சாலைகளில் போராடி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி, திடீர் மின்வெட்டால் உயிரிழந்தார். மின்வெட்டு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

மேலும், ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் உட்பட பல முக்கிய இடங்களிலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்குக் கூட பம்பு செட்டுகளை இயக்க தேவையான மின்சாரம் கிடைக்கவில்லை. எங்கள் ஆட்சியில் இல்லாத மின்வெட்டு தற்போது ஏன் ஏற்படுகிறது? இது நிர்வாக குளறுபடியா, தொழில்நுட்பக் கோளாறா என்பதை முதல்வர் விளக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.