அரசியல்

"பத்தவச்சிட்டியே பரட்ட" ஆஸ்டினால் மோதிக்கொண்ட இபிஎஸ் vs செங்கோட்டையன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுப்பிய கேள்வி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதமாக மாறியது.


EPS VS SENGOTTAIYAN
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுப்பிய கேள்வி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதமாக மாறியது.

6 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதிகளைச் சேர்ந்த மக்களின் பிரதிநிதித்துவம் சட்டப்பேரவையில் இல்லாமல் போயுள்ளதாக ஆஸ்டின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்கள் விதிமுறைகளின்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் மக்களின் பிரச்சினைகள் அவர்களின் கண்காணிப்பில் தீர்க்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஒரு தொகுதியின் மக்களின் பிரச்சினைகளை முழுமையாக அறிந்து, அவற்றை சட்டப்பேரவையில் அரசின் கவனத்துக்கு கொண்டு வர சட்டமன்ற உறுப்பினர் அவசியம் என வலியுறுத்தினார்.

அப்போது அமைச்சர் செங்கோட்டையன், "6 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். அந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்தார். இதனால் அவையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஒரு கட்சியில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் இணைவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேச முயன்றார். அந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது தொடர்பாக அவையில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டார்.

இதற்கிடையே, எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட இருந்த அருண் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். பின்னர் அவர் கட்சியில் இணைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனை "குதிரை பேரம்" என்றும் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அருணின் வேட்பு மனு முறையாக தாக்கல் செய்யப்படாததால் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது" என விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து கட்சி மாறுதல், ராஜினாமா உள்ளிட்ட விவகாரங்களை எடப்பாடி பழனிசாமி பேச முயன்ற நிலையில், சபாநாயகர் மீண்டும் குறுக்கிட்டார்.

"இது என்ன பொதுக்கூட்டமா?" எனக் கடுமையாகக் கேள்வி எழுப்பிய சபாநாயகர், சட்டப்பேரவையின் மாண்பை காக்குமாறு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து அவையில் தொடர்ந்து விவாதிக்க அனுமதி இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனால், ஆஸ்டின் எழுப்பிய 6 தொகுதிகள் தொடர்பான கேள்வி, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான நேரடி மோதலாக மாறியது. சபாநாயகர் பலமுறை குறுக்கிட்டு, விவாதத்தை கட்டுக்குள் கொண்டு வந்து முடித்து வைத்தார்.