அரசியல்

"கட்சி கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டார்" - சி.மகேந்திரன் குறித்து CPI குற்றச்சாட்டு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்து வந்த சி.மகேந்திரன் மோசடி பேர் வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என மு. வீரபாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார்.


கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.மகேந்திரன் நேற்று தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்து வந்த சி.மகேந்திரன் கட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்தவர்.
சமீபகாலமாக கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கட்சியின் கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.
குறிப்பாக, கட்சியின் ஆரம்பகால தலைவர்களால் உருவாக்கப்பட்ட, இன்று தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தை குறுக்கு வழியில் சிலர் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களை தயார் செய்திருந்திருந்தனர்.

அத்தகைய மோசடி பேர் வழிகளுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் செயல்பட்டார். எனவே, சி.மகேந்திரன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவரும் கட்சியுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார்.

மகேந்திரனின் இந்த நடவடிக்கையின் மூலம் அவர் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிகச் சரியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரியப்படுத்திக் கொள்கிறது.” என தெரிவித்துள்ளார்.