அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் த.வெ.க தலைவர் விஜய் இன்று பகல் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் முதல் தகவல் அறிக்கை வெளியாகி சர்ச்சையானது. பொதுவாக பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், போக்சோ போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் கூடிய முதல் தகவல் அறிக்கை சமூக வலைதளத்தில் வெளியானதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, முதல் தகவல் அறிக்கை நகலையோ சமூக வலைதளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்களும் சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில், வழக்கு தொடர்பாக நிறைய கேள்விகளை முன்வைத்தது. இது தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்துகிறது.
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து த.வெ.க தலைவர் விஜய் புகார் அளிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திமுக அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியல்களை ஆளுநரிடம் வழங்க ஏற்கனவே விஜய் திட்டமிருந்ததாக கூறப்படும் நிலையில், ஆளுநரை இன்று பிற்பகல் ஆளுநரை சந்திக்க உள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









