பெரம்பூரைச் சேர்ந்த ராஜேஷ் (38), கடந்த பத்து ஆண்டுகளாக எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள எஸ்கேப் சினிமா திரையரங்கில் என்ஜினியராகப் பணிபுரிந்து வந்தார். திரையரங்கின் நான்காவது ஸ்கிரீனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், பழுதடைந்த ஹைட்ராலிக் லிப்டை சரிசெய்யும் பணியில் ராஜேஷ் மற்றும் மூத்த என்ஜினியர் தனசேகர், தொழில்நுட்ப ஊழியர்கள் முருகன், டேவிட் ஆகியோர் இன்று அதிகாலையில் ஈடுபட்டிருந்தனர்.
சுமார் 25 மீட்டர் உயரத்தில் நின்று கொண்டு ப்ரொஜெக்டரை சுத்தம் செய்ய லிப்டில் இறக்கியபோது, லிப்ட் திடீரென தானாக இயங்கி மேலே இருந்த மேற்கூரையில் இடித்தது. இதில் ராஜேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு மற்றும் விசாரணை:
இந்தச் சம்பவம் குறித்து ராஜேஷின் மனைவி தேவிகா அளித்த புகாரின் அடிப்படையில், அண்ணாசாலை போலீசார் அலட்சியமாக இயந்திரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திரையரங்கின் பொறுப்பாளரான முகப்பேரைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் மூத்த என்ஜினியர் தனசேகரன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராஜேஷ், இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









