தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். 92 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக பல அசவுகரியங்களை சந்தித்ததால் பல ஆண்டுகளாக பொதுவெளியில் வருவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்று வந்தார்.
மேலும் படிக்க: எந்த திணிப்பும் வெற்றி பெறாது.. விஜய் முதலில் இதை செய்யட்டும்- ஆவேசமான விஷால்
இந்நிலையில், தயாளு அம்மாளுக்கு நேற்று (மார்ச் 3) திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாவிற்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட விவரம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஒரு மணிநேரம் தயாளு அம்மாவுடன் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தயாருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட பலரும் மருத்துவமனைக்கு சென்றதாக தகவல் வெளியானது.
மருத்துவமனையில் உள்ள தயாளு அம்மாள் உடல்நிலை குறித்து விசாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி இன்று (மார்ச் 4) காலை மருத்துவமனைக்கு வருகை தந்தார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது தாயாரின் உடல் நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
LIVE 24 X 7









