தமிழ்நாடு சுற்றுலாத்துறை www.ttdconline.com என்று அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே மக்களுக்கு ஆன்லைன் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒரு கும்பல், அரசின் தமிழ்நாடு ஹோட்டல் பெயரில் சுற்றுலா செல்ல விரும்பும் பொது மக்களை குறிவைத்து மோசடியில் இறங்கியுள்ளது. ஹோட்டல் புக் செய்வதற்காக கூகுளில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணையதள பக்கத்தை தேடினால், பொது மக்களை ஏமாற்றும் வகையில் பல்வேறு மோசடி இணையதளங்களும் தென்படுகிறது. இது தெரியாமல், அந்த இணையதளங்களில் ஹோட்டல் ரூம் புக் செய்து பணத்தை இழந்துள்ளனர் சிலர்.
ஒகேனக்கல் தமிழ்நாடு சுற்றுலாத் துறையைச் சேர்ந்த அலுவலரிடம், ஒருவர் தமிழ்நாடு இணையதளம் மூலம் அறை புக் செய்துள்ளதாக கூறி அணுகியுள்ளார். ஆனால் அவரது பெயரில் எந்த அறையும் புக் ஆகவில்லை என அதிகாரி தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக விசாரித்த போது, தேவநாராயணன் என்கிற நபர் www.TTF cr hotel tamilnadu - home akka.com என்ற போலியான இணையதளம் மூலம் அறை புக் செய்து பணத்தை இழந்துள்ளது தெரியவந்தது.
இதேபோன்று ராமேஸ்வரம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அலுவலர் தரப்பிலும் தலைமை அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. www.hoteltamilnadu.com என்கிற போலி இணையதளத்தில் அறை புக் செய்து சுற்றுலாப் பயணிகள் ஏமாந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல மாவட்டங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு தொடர் புகார் வந்ததையடுத்து, மூத்த மேலாளர் ஜஸ்டின் ஜோஷ் என்பவர் ஆதாரங்களுடன் தமிழக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து போலி இணையதளத்தை உருவாக்கிய நபர்கள் குறித்து தொழில்நுட்ப ரீதியான விசாரணையை தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழக சுற்றுலா துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பொதுமக்கள் ஆன்லைன் சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறும் இது போன்று போலி இணையதளங்களில் நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளனர்.
LIVE 24 X 7









