சமீபத்தில், Makkal Paarvai Educational & charitable trust (SSG) என்னும் யூடியூப் சேனல் நடத்திவரும் சித்ரா என்பவர், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், யூடியூபரான திவ்யா கள்ளச்சி என்பவர் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். youtuber-ஆன திவ்யா கள்ளச்சி, சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக சித்ரா தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இந்தப் புகார் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா கள்ளச்சி என்ற youtuberம், இவரது நண்பருமான ஈரோட்டைச் சேர்ந்த கார்த்தியும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள அத்திகுளம் பகுதியில் ரீல்ஸ் எடுப்பதற்காக சென்றுள்ளனர். இந்த கார்த்தி, தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சித்ராவின் நண்பர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திவ்யா கள்ளச்சி சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற வீடியோவை எடுத்து தனக்கு அனுப்பி வைக்கும்படி, கார்த்தியிடம் கூறியுள்ளார் சித்ரா. அதன் அடிப்படையில் கார்த்தி தனது நண்பரான ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் உதவியுடன், திவ்யா கள்ளச்சி இரண்டு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் படம் எடுத்து சித்ராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு திவ்யா கள்ளச்சியிடம் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சித்ரா பணம் கேட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை வளையத்திற்குள் சித்ராவை கொண்டு வந்த போலீசார் கார்த்தி, ஆனந்த், திவ்யா கள்ளச்சி ஆகிய மூவரிடமும் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சித்ரா என்பவர் தான் திவ்யா கள்ளச்சியிடம் பணம் பறிப்பதற்காக இது மாதிரியான வீடியோக்களை எடுக்க சொல்லியிருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வருவதால் சிறுவர்களின் ஆபாச வீடியோ எடுத்த ஆனந்த், கார்த்தி இவர்களுக்கு தூண்டுகோலாக செயல்பட்ட சித்ரா மற்றும் சிறுவர்கள் மீது பாலியல் தாக்கலில் ஈடுபட்ட திவ்யா கள்ளச்சி ஆகிய 4 பேர் மீது போக்சோ உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
LIVE 24 X 7









