இந்த நிலையில், நேற்று இரவு ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானத்தின்போது இரண்டு பெரிய தூண்கள் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனால் பூந்தமல்லி - மவுண்ட் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் குறித்து நந்தம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில், உயிரிழந்தவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பது தெரியவந்தது. இவர் பூந்தமல்லி காட்டுப்பாக்கம் பகுதியில் தங்கி தனியார் பில்லிங் நிறுவனத்தில் சேல்ஸ் மேலாளராக பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நந்தம்பாக்கம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். L&T நிறுவன பொறுப்பாளர் நரேந்திர கிருஷ்ண பிரபாகர் மற்றும் சிலர் மீது நந்தம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
LIVE 24 X 7









