கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வட மாநில நபர் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில், மீட்கப்பட்டவரை அப்பகுதி மக்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி உள்ளனர். இந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து இருசக்கர வாகனம் உடனடியாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் சிக்கிய இளைஞர்களில் ஒருவர் சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் சாலையோரத்தில் கிடந்துள்ளார்.
இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
LIVE 24 X 7









