மவுண்ட் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் திருவல்லிக்கேணி ஹோட்டலில் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட ஆறு நபர்கள் என எட்டு நபர்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை காவல் நிலையத்தில் புகார்கள் பதிவாகியுள்ளது. காவல் நிலையத்தில் புகார்கள் பதிவாகாமல், மேலும் 10 நபர்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் மற்றும் அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு செய்து சீல் வைத்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் விக்னேஷ், ஸ்டீபன். கடந்த 30 ஆம் தேதி நண்பரின் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக அவரது வீட்டுக்குச் சிலரை அழைத்துச் சென்றனர். வேலை முடிந்ததும் விக்னேஷ், ஜெய்சங்கர், ஷாம் விவேகானந்தன் மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த ஸ்டீபன், ரபேக்கா ஆகிய ஆறு நபர்கள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் பிலால் ஹோட்டலில் பிரியாணி, பீப் ரோஸ்ட் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டுள்ளனர்.
மறுநாள் காலை அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு காலரா மருத்துவமனையில் ஆறு நபர்களும் அன்றைய தினம் மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. புகாரின் அடிப்படையில், அதன் திருவல்லிக்கேணி பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தேனாம்பேட்டை கல்லூரியில் படிக்கும் சகோதரிகளான 19 மற்றும் 17 வயது இளம்பெண்கள், பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கடந்த 30ஆம் தேதி, மவுண்ட் ரோட்டில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் உணவு அருந்தியுள்ளனர். சில மணி நேரங்களிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு, இதன் தொடர்ச்சியாக, வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் கல்லூரி மாணவிகள் இருவரும் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், செய்திகளில் இந்த விவகாரம் தெரியவர கடந்த 30 ம் தேதி சாப்பிட்டு உடல்நலக்கோளாறு காரணமாக பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு குவிந்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தங்களது குடும்பங்களைச் பயாஸ் கான் (23), முகமது அன்சாரி (36), சயது அலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள் கடந்த 30ஆம் தேதி பிரியாணி, பீஃப் ரோஸ்ட் ஆகியவை சாப்பிட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு திருவல்லிக்கேணி மற்றும் ராயப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று தினங்களாக தொடர் வயிற்றுப்போக்கு, வாந்தி, ரத்தமாக வாந்தி எடுத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், தற்போது வரை காவல் நிலையங்களில் தாங்கள் யாரும் புகார் அளிக்கவில்லை எனவும், இன்று புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் சொல்லியும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதே போல மவுண்ட் ரோடு பிலால் ஹோட்டலில் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு கல்லூரி பெண்களின் தந்தை முகமத் அப்துல் அக் ஷெரீப் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 30 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகைக்காக புரசைவாக்கம் சென்று ரம்ஜான் பண்டிகைக்காக புதிய ஆடைகளை எடுத்துக்கொண்டு மவுண்ட் ரோடு வழியாக வந்தபோது மவுண்ட் ரோடு பிலால் ஹோட்டலில் பிரியாணி, இடியாப்பம், நல்லி எலும்பு குருமா ஆகியவற்றை சாப்பிட்டதாகவும் அன்று இரவு முதல் தனது மகள்களுக்கு தொடர் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டதாகவும், கடந்த இரு தினங்களாக தனது மகள்கள் இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் மவுண்ட் ரோடு தனியார் ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக மவுண்ட் ரோடு தனியார் நிர்வாகத்திடம் நேரில் சென்று விளக்கம் கேட்டபோது, "இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமே, நீங்கள் சொல்லி தான் தெரிய வருகிறது. எங்கள் ஹோட்டலில் சுத்தமான முறையில் இறைச்சிகள் சமைக்கப்பட்டு உணவாக்கப்படுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். ஆனால் இதுவரை இப்படி ஒரு புகார் வந்ததே இல்லை. அந்த இரண்டு பெண்களுக்கும் வேறு ஏதேனும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வந்து தாராளமாக எங்கள் ஹோட்டலில் சோதனை செய்து கொள்ளலாம், என ஹோட்டல் நிர்வாகத்தினர் வாய்மொழி விளக்கம் கொடுத்துள்ளனர். இரு வேறு சம்பவங்கள் தொடர்பாகவும் திருவல்லிக்கேணி போலீசார் மற்றும் ஐஸ் ஹவுஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, சதீஷ் குமார் மற்றும் அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு செய்து சீல் வைத்தனர்.
LIVE 24 X 7









