இந்த விழாவில், ராஜ ராஜ சோழனின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டுச் சோழர்களின் ஆட்சிகாலம் குறித்து பிரதமர் மோடி பேசினார். “சோழப் பேரரசின் சகாப்தம் இந்தியாவின் பொற்காலங்களில் ஒன்று என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். சோழப் பேரரசு இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கும் பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் சென்றது. வரலாற்றாசிரியர்கள் ஜனநாயகத்தின் பெயரில் பிரிட்டனின் மாக்னா கார்ட்டாவைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சோழப் பேரரசில் ஜனநாயக அமைப்புமூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மற்ற இடங்களைக் கைப்பற்றிய பிறகு தங்கம், வெள்ளி அல்லது கால்நடைகளைக் கொண்டு வந்த பல மன்னர்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம், ஆனால் ராஜேந்திர சோழன் கங்கை நீரைக் கொண்டு வந்தான். தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்டமான சிலை அமைக்கப்படும்” என்று கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா தனது பாதுகாப்பை மிக முக்கியமானதாகக் கருதுவதாகக் கூறினார். அதனைத்தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை தாக்கியவர்களுக்கு, அவர்களுக்கு புரியும் மொழியில், இந்தியா எவ்வாறு பதிலளித்தது என்பதை உலகம் கண்டது. இந்த நடவடிக்கை, உலகின் எந்த இடமும் இந்தியாவின் எதிரிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பானது அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம். நாம் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும். நிலவின் தென் துருவத்தில் இந்தியா தடம் பதித்த பகுதியை சிவசக்தியெனப் பெயர் சூட்டினோம்.
ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்வாகம் செய்தாலும் கூட, அதன் கோபுரத்தைத் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலய கோபுரத்தைவிடக் குறைவானதாக வைத்தார். தன் தந்தையால் கட்டியெழுப்பப்பட்ட ஆலயத்தின் கோபுரத்தை அனைத்தையும் விட உயரமானதாகத் தக்க வைக்க அவர் விரும்பினார். வரவிருக்கும் காலங்களில் தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், அவருடைய மைந்தன் முதலாம் ராஜேந்திரன் சோழனுடைய பிரமாதமான உருவச்சிலை நிறுவப்படும் என்று கூறினார்.
இன்று அப்துல் கலாமின் நினைவுத் தினம், வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை என்றும், 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
LIVE 24 X 7









