என்ன நடந்தது?
ரஜத் படிதாரின் பழைய மொபைல் எண் 90 நாட்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாததால், தொலைத்தொடர்பு நிறுவனம் அந்த எண்ணைச் சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் வசிக்கும் மனிஷ் என்ற இளைஞருக்குப் புதிய சிம்மாக வழங்கியது.
ஜூன் 28, 2025 அன்று மனிஷ் அந்தப் புதிய சிம்மைப் பெற்றுள்ளார். சிம்மை மொபைலில் போட்டதும், அதில் உள்ள வாட்ஸ்அப் கணக்கின் ப்ரொஃபைல் படத்தில் ரஜத் படிதாரின் புகைப்படம் இருந்தது. இதைப் பார்த்துக் குழப்பமடைந்த மனிஷ், தனது நண்பர் கேம்ராஜுடன் இதுபற்றிப் பேசியுள்ளார்.
சில நாட்களில், மனிஷின் எண்ணுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வரத் தொடங்கின. அழைத்தவர்களில் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களும் இருந்தனர். ஆரம்பத்தில் இது ஏதோ குறும்பு அழைப்பு என்று நினைத்த மனிஷும், அவரது நண்பரும் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்.
இளைஞர்களிடம் ரஜத் படிதார் விடுத்த கோரிக்கை
ஒரு கட்டத்தில், ரஜத் படிதாரே மனிஷுக்கு போன் செய்து, “நண்பா, நான் ரஜத் படிதார் பேசுகிறேன். அது என்னுடைய பழைய எண். தயவுசெய்து அதை எனக்குத் திருப்பித் தாருங்கள்” என்று கேட்டுள்ளார். ஆனால் மனிஷ், “நான் எம்.எஸ். தோனி பேசுகிறேன்” என்று கிண்டலாகப் பதிலளித்துள்ளார்.
ரஜத் படிதார் அந்த எண்ணின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. இதையடுத்து, ரஜத் படிதார் கோபமடைந்து, "சரி, நான் போலீஸை அனுப்புகிறேன்" என்று கூறி போனைத் துண்டித்தார்.
காவல்துறையின் தலையீடு
ரஜத் படிதார் உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த சில நிமிடங்களிலேயே, காவல்துறையினர் மனிஷின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். அப்போதுதான், இது உண்மையான சம்பவம் என்பதை மனிஷ் உணர்ந்தார். உடனடியாக, மனிஷ் அந்தச் சிம் கார்டை ரஜத் படிதாரிடம் ஒப்படைத்தார்.
இந்தச் சம்பவம்குறித்து மனிஷ் பேசும்போது, "தவறான எண்ணின் காரணமாக, கோலியிடம் பேச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்க்கையின் கனவு நிறைவேறியது" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
LIVE 24 X 7









