கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கவும், அரசு துறைகளின் மற்ற சேவைகளைப் பெறவும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்களும் என மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்தநிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்ற முதலமைச்சர், தொடர்ந்து ஒரு சில பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
முன்னதாக, காமராஜர் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த காமராஜரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
LIVE 24 X 7









