மீனவர் சங்கத்தில் தீர்மானம்
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 10) எட்டு தமிழக மீனவர்களைக் கைது செய்தனர். இதைக் கண்டித்து, ராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்கத்தினர் அவசரக் கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை கடற்படையின் தொடர்ச்சியான இந்த நடவடிக்கை தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகவும், தங்கள் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தின் அடுத்த கட்டங்கள்
தற்போது தொடங்கியுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் தவிர, மீனவர்கள் அடுத்தகட்ட போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.
2025 ஆகஸ்ட் 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்துடன் போராட்டத்தினை தொடங்க இராமேஸ்வரம் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, வருகின்ற 2025 ஆகஸ்ட் 12ம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ரயில் மறியல் மூலம் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளனர்.
முதலமைச்சர் கடிதம்
இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஆகஸ்ட் 6 அன்று 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து குறிப்பிட்டிருந்தார். 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 17 முறை கைதுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், தற்போது இலங்கை வசம் 80 தமிழக மீனவர்களும், 237 படகுகளும் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









