சென்னை: தமிழ்நாட்டின் மிகப்பெரும் அணையாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக மேட்டூர் அணை உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு அதிகளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் முழு கொள்ளளவான 120 கன அடி தண்ணீர் எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் 16 கண் மதகு வழியாக அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அணையின் 16 கண் மதகுகள் தாண்டி பாறைகளுக்கு நடுவே ஒரு நாய் ஒன்று சிக்கிக் கொண்டது. சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து செல்வதால் அந்த நாயால் கடந்த 4 நாட்களாக கரைக்கு வர முடியவில்லை. அந்த நாய் சுற்றிலும் ஓடும் தண்ணீருக்கு நடுவே தனித்தீவு போல் உள்ள பாறையில் சிக்கி பரிதவிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.
இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, தண்ணீரின் நடுவே சிக்கித்தவிக்கும் நாய்க்கு முதற்கட்டமாக உணவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின்பேரில் தீயணைப்புத்துறை படையினர் ட்ரோன் மூலம் அந்த நாய்க்கு பிஸ்கெட், பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருகின்றனர். தண்ணீரின் அளவு குறைந்தபிறகு அந்த நாய் மீட்கப்படும் என தீயணைப்புத்துறை வீரர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள பாறையில் சில நாய்கள் சிக்கியுள்ளதாகவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கும், தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் உத்தரவிடக் கோரி 'விலங்குகளின் சொர்க்கம்' என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரகாஷ் காந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு, அவசர வழக்காக விசாரித்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும், வருவாய் துறையினர், ட்ரோன் மூலம் நாய்களுக்கு உணவளித்து, அவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
தமிழக அரசின் விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நாய்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
LIVE 24 X 7









