2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம், அதன் முதல் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
பிரசாரப் பயணம் மற்றும் கட்டுப்பாடுகள்:
விஜய் தனது பிரச்சாரப் பயணத்தை நாளைத் திருச்சியிலிருந்து தொடங்குகிறார். அங்கு டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சலகம், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை போன்ற பகுதிகளில் பரப்புரையாற்ற இருக்கிறார்.
விஜயின் பிரசாரப் பயணத்திற்காகத் திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து மாற்றங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பிரசாரத்திற்கு அனுமதி அளித்த காவல்துறை, விஜய்க்கு 23 நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில், விஜய்க்கு எனத் தயாரிக்கப்பட்ட வாகனத்தில் அமர்ந்துதான் செல்ல வேண்டும், சாலை வலம் மேற்கொள்ளக் கூடாது, குறிப்பிட்ட இடங்களில் 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும், பட்டாசு வெடிக்கக் கூடாது, ஆம்புலன்ஸ் வசதி கட்டாயம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது போன்ற முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கட்சியின் நிலைப்பாடு
கட்சி தொடங்கியதிலிருந்து, அதன் தலைவர் விஜய் "அரசியல் எதிரி - பாஜக, கொள்கை எதிரி - திமுக" என்று தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது. கட்சியின் முதல் மாநாடு 2024-ம் ஆண்டு விக்கிரவாண்டியிலும், இரண்டாவது மாநில மாநாடு 2025 ஆகஸ்ட் மாதம் மதுரையிலும் பிரம்மாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









