இதனைத் தொடர்ந்து தவெக தொண்டர்கள், இளைய காமராஜர் விஜய் என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். இது காங்கிரஸ் கட்சியினை சார்ந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. இதற்கு அடுத்த சில தினங்களிலேயே பலர் விஜயையும், தவெக தொண்டர்களையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்கள்.
இருந்தாலும், தவெக தொண்டர்கள் தொடர்ச்சியாக இணையதளங்களில், இளைய காமராஜர் விஜய் என நாள்தோறும் போஸ்டர், ரீல்ஸ் என பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தான், எக்ஸ் வலைத்தளத்தில் “இளைய காமராஜர்” என ஒரு போஸ்டரை தவெக ஆதரவு ஐடி ஒன்று பதிவிட்டு இருந்தது. அதில் விஜய் அமர்ந்து இருப்பது போலவும், காமராஜர் நின்றுக்கொண்டு விஜயின் தோளில் கை வைத்தது போலவும் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதனை கண்ட, எம்.பி கார்த்தி சிதம்பரம், “இது பெருந்தலைவருக்கு இழைக்கப்படும் அப்பட்டமான அவமானம். இதைப் பதிவிட்டவர்கள் அவர்களின் அரசியல் மற்றும் வரலாற்று அறிவு இல்லாததை அம்பலப்படுத்துகிறார்கள்” என காட்டமாக கமெண்ட் செய்துள்ளார்.
This is an outright insult to Perunthalaivar, those who posted this expose their lack of political & historical knowledge. https://t.co/TEHum7N1UG
— Karti P Chidambaram (@KartiPC) June 6, 2025
இரண்டாம் காமராஜர் யாரும் கிடையாது:
காங்கிரஸ் கட்சியினை சார்ந்தவர்கள் காமராஜருடன், விஜய்யை ஒப்பீடு செய்வதை தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இதற்கு முன்னர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியினை சார்ந்தவருமான மாணிக்கம் தாகூர் ஒரு பேட்டியில், “பெருந்தலைவர் காமராஜர் என்பவர் ஒரே ஒருவர் தான், அவரைப் போல் யாரும் வர முடியாது. இரண்டாம் காமராஜர் மற்றும் இளம் காமராஜர் என யாரையும் கூற முடியாது. எனவே மிகைப்படுத்தி பெருந்தலைவருடன் ஒப்பிட்டு நடிகர் விஜய் உட்பட யாரையும் பேசுவது என்பது சரியாக இருக்காது” என குறிப்பிட்டு இருந்தார்.
விழா நடந்த அன்றைய தினமே சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், "வரலாறு தெரியாதவர்கள், காமராஜரின் நீண்ட அரசியல் சரித்திரம், பெருமை, தகுதி பற்றி சரியாக புரியாதவர்களே இப்படி நினைக்கிறார்கள்” என விமர்சனம் செய்திருந்தார்.
விஜயை கலாய்த்த சீமான்:
விஜய் இளைய காமராஜரா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் காட்டமாக நடிகர் விஜயை கிண்டல் செய்திருந்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில், "இந்த மாதிரி கேட்க நேரிடும் என்றுதான் எங்கள் தாத்தா(காமராஜர்) முன்பே மறைந்துவிட்டார்; 'இளைய காமராஜர்' என்று விஜயை யார் சொன்னாரோ அவருக்கு காமராஜர் யார் என்று தெரியாது; அவர் என்ன படிச்சாரோ, காமராஜரை படிக்கவில்லை; காமராஜர் 50 படம் நடித்து முதலமைச்சராக வரவில்லை, அரசியலுக்கு வரவில்லை" என தவெக தலைவர் விஜயை 'இளைய காமராஜர்' என்று குறிப்பிட்டது தொடர்பான கேள்விக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்திருந்தார்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7-8 மாதங்களே இருக்கும் நிலையில், சமூக வலைத்தளத்தின் மூலமாக பொதுமக்கள் மத்தியில், அடுத்த காமராஜர் விஜய் தான் என்பதை வலுக்கட்டாயமாக திணிக்க தவெக தொண்டர்கள் முயல்கிறார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
LIVE 24 X 7









