மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் இன்று (24.11.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விழாவின் சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயன் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் இவ்விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்த விழாவில் கலந்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. எம்ஜிஆருக்காக திரை வாழ்க்கையை தியாகம் செய்து, கடைசி வரை எம்ஜிஆருக்கு உறுதுணையாக இருந்தவர் ஜானகி ராமச்சந்திரன். ராமாவரம் தோட்டத்துக்கு யார் சென்றாலும் வயிறு நிறைய விருந்து வைத்து உபசரிப்பார். கட்சி நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி ராமச்சந்திரன்.
நான் மூன்று முறை அவரை நேரில் சந்தித்து உள்ளேன். ராகவேந்திரா படத்தின்போது அவரை சந்தித்தேன். இரண்டாவது முறை அவர் முதலமைச்சராக இருந்தபோது சந்தித்தேன். பின்பு மூன்றாவது முறை நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது என்னை அழைத்து அவர் சந்தித்தார். அவர் கையால் காபி போட்டுக் கொடுத்து உபசரித்தார்.

படங்களில் நான் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ஜானகி ராமச்சந்திரனிடம் எம்ஜிஆர் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார். அவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து தான். கட்சி இரண்டாக பிளவுபட்ட போது, அவர் எடுத்த முடிவு அது. ஜெயலலிதா அம்மையாரிடம் கட்சியை ஒப்படைத்தது அவரின் நல்ல குணம் மற்றும் பக்குவத்தை உணர்த்தியது. இன்று அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்துள்ள கட்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றி.
நான் அரசியலுக்கு வருவதாக முடிவு செய்து பலரிடம் ஆலோசனை கேட்டபோது பலரும் பல்வேறு கருத்துக்களை சொன்னார்கள். அதெல்லாம் கேட்டபோது பல்வேறு எண்ணங்கள் மனதில் ஏற்பட்டது. அரசியல் தெரிந்து சொல்கிறார்களா? தெரியாமல் சொல்கிறார்களா? என்று நான் யோசித்தேன். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார், ”ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் அது உனக்கு மட்டும் சந்தோஷம் தருவதாக எடுக்காதே மற்றவர்களுக்கும் அதனால் சந்தோஷம் கிடைக்கிறதா என்பதை உணர்ந்துதான் எடுக்க வேண்டும்” என்று. அந்த அடிப்படையில் ஜானகி ராமச்சந்திரன் தொண்டர்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று ஜெயலலிதாவிடம் கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்தார்” என்று கூறினார்.
LIVE 24 X 7









