இந்தியா
நடுவானில் பயணிக்கு நேர்ந்த சிக்கல்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
மும்பையில் இருந்து சென்னைக்கு 162 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த விமானமானது, நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளது. உடல் நலம் பாதித்த பயணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது விமானம்.
மும்பையில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 162 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் நடுவானில் கோவா மாநிலத்தை கடந்து பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவருக்கு, திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விமானி விமானத்தை அவசரமாக தரை இறக்க முடிவு செய்தார்.
அப்போது விமானம் தெலுங்கானா மாநிலம் சென்று, ஐதராபாத் விமான நிலையத்தில் அதிகாலை 4.45 மணிக்கு அவசரமாக தரையிறங்கியது. உடனடியாக ஐதராபாத் விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, பயணியை பரிசோதித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணியை, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்ததால் பயணி மற்றும் அவரோடு வந்த பயணி இருவரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி, ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அதன் பின்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், 160 பயணிகளுடன் புறப்பட்டு, காலை 6:40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தது. மும்பை- சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.