இந்த வேலைநிறுத்தம் காரணமாக, கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெல்காம், கல்புர்கி, மைசூரு, மங்களூரு மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கர்நாடக உயர்நீதிமன்றம் போராட்டத்தை ஒரு நாளைக்கு ஒத்திவைக்குமாறு பரிந்துரைத்திருந்தாலும், போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.
இந்த வேலைநிறுத்தம், தமிழகம் - கர்நாடகா எல்லையான ஒசூரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக அதிகாலையில் பெங்களூருவை நோக்கிச் செல்லும் பயணிகள், இன்று கர்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பெரும்பாலான பொதுமக்கள் ஒசூரில் குவிந்துள்ளனர். இதனால், பயணிகள் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்க முண்டியடித்து, அவசரமாக இடம்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டு வரும் நிலையில், ஒசூரிலிருந்து பெங்களூருவை நோக்கிச் செல்லும் சேவைகள் பயணிகளின் எண்ணிக்கையைத் தாங்க முடியாத அளவுக்கு நிரம்பி வழிகின்றன.
பொதுமக்கள், குறிப்பாக வேலைக்குச் செல்வோர் மற்றும் மாணவர்கள், பேருந்து சேவைகளில் தடங்கல் ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு மாற்றுப் பயணத் திட்டங்களை வகுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் கூறியதாவது, "நாங்கள் எங்கள் உரிமைக்காகவே போராடுகிறோம். அரசு எங்கள் கோரிக்கைகளைக் கவனிக்காவிட்டால், இந்த வேலைநிறுத்தம் தொடரும்" எனப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியுள்ளனர்.
கர்நாடக மாநில அரசும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த வேலைநிறுத்தத்திற்கு ஒரு முடிவுகாண நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
LIVE 24 X 7









