ஹமீர்பூர் மக்களவை தொகுதியிலிருந்து தொடர்ந்து 4 முறை மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் அனுராக் தாக்கூர். இவர் விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாச்சலப்பிரதேசம் உனாவில் உள்ள பி.எம்.ஸ்ரீ பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில், பாஜக எம்பி அனுராக் தாக்கூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, முதல் விண்வெளி பயணி யார்? என மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார் அனுராக் தாக்கூர். அதற்கு மாணவர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தார்கள். மாணவர்களின் பதிலைக் கேட்டு புன்னகைத்த அனுராக் தாக்கூர், ’விண்வெளிக்கு சென்ற முதல் நபர் பகவான் ஹனுமான் என்று நான் நினைக்கிறேன்’ என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அனுராக், "பாடப்புத்தகங்களை நமது மரபுகளின் வழியாக பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நமது ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாரம்பரியம், அறிவு, கலாச்சாரம் ஆகியவற்றை நாம் இன்னும் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்கு காட்டிய உலகத்தை போலவே நாம் இருப்போம்" என்றார்.
पवनसुत हनुमान जी…पहले अंतरिक्ष यात्री। pic.twitter.com/WO5pG2hAqT
— Anurag Thakur (@ianuragthakur) August 23, 2025
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரின் பேச்சு அறிவியலுக்கு முற்றிலும் எதிராக உள்ளது என எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி முன்னாள் மத்திய அமைச்சரின் கருத்து கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில், ”நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், பள்ளி மாணவர்களிடம் நிலவில் முதன்முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.
அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. வகுப்பறைகளில் இளம் மனங்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும்.

இந்தியாவின் எதிர்காலம், உண்மையினை கட்டுக்கதையுடன் குழப்பிக் கொள்ளாமல், அறிவியல்பூர்வமான ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
LIVE 24 X 7









