விமான நிலையம் அருகே மெகானி என்ற இடத்தில் உள்ள கோடா கேம்ப் என்ற குதிரை பந்தய மைதானம் அருகே விமானம் விழுந்து நொறுங்கியது. அகமதாபாத்தில் இருந்து 1.17 மணிக்கு புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளது. பிற்பகல் 1.50 மணிக்கு விமானம் பறக்கத்தொடங்கிய சிறிது நேரத்தில் எமர்ஜென்சி உதவி கோரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான விபத்தில் சிக்கியுள்ள பயணிகள் மற்றும் குழுவினரை மீட்க ஆம்புலன்ஸ் விரைந்துள்ளது. விமான விபத்து காரணமாக வானை முட்டும் அளவு அப்பகுதியில், கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில், விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 242 பயணிகள், 10 பணியாளர்கள், 2 விமானிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட ஏராளமான ப்யணிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானி சுமித் 8,200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர். மற்றொரு விமானியான கிளைவிற்கு 1100 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளதாக தகவல்.
ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் மாலை 5 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விமான விபத்து குறித்து குஜராத் முதலமைச்சரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளானதாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
LIVE 24 X 7









