ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு முக்கிய காரணம், இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் 1987 ஆம் ஆண்டு வெளியான "நாயகன்" படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்தது தான்.
முன்னதாக 'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையானது. மேலும், 'தக் லைஃப்' படம் கர்நாடகாவில் வெளியிடுவதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து கர்நாடக நீதிமன்றம் கமல்ஹாசனை, 'நீங்கள் என்ன மொழி அறிஞரா? எனவும் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது எனவும் கண்டித்ததுடன் மன்னிப்பு கேட்கக் கூறியது. இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் கடைசி வரை மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் இந்த படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை.
இதனைத்தொடர்ந்து, 'தக் லைஃப்' படம் கர்நாடகாவில் வெளியிட அம்மாநிலத்தின் சினிமா வர்த்தக சபை தடை விதித்துள்ளது என்றும், இது நீதித்துறையின் அதிகாரத்தை மீறுவதாகும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதையடுத்து, வழக்கின் அவசரம் கருதி கர்நாடக சினிமா வர்த்தக சபைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாக நீதிபதிகள் பிரசாந்த்குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதிமன்றம் எப்படி, அப்படிக் கூறலாம்?.
கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது. தணிக்கை சான்றிதழ் பெற்ற படத்தை தடை விதிக்க முடியாது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்துக்கு தடைவிதித்தது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வரும் 19 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
LIVE 24 X 7









