விருமாண்டி, காதல், வசூல் ராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ‘காதல்’ சுகுமார். இவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக வடபழனியை சேர்ந்த துணை நடிகை கடந்த ஜனவரி மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக மாம்பலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி நடிகர் காதல் சுகுமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மோசடி, பெண்ணை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
குற்ற உணர்ச்சி இல்லாமல் உள்ளார்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட துணை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மீண்டும் காதல் சுகுமார் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், நான்கு மாதமாக எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் நிலையத்திற்கு வந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன்.
கடந்த 16ஆம் தேதி தான் எனது புகார் தொடர்பாக காதல் சுகுமார் மீது வழக்கே பதியப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு பதியப்பட்டதோடு சரி, இதுவரை அவரை போலீசார் கைது செய்யவில்லை. ஏன் என்ற காரணம் தெரியவில்லை. பெண் என்று பாராமல் என்னை ஏமாற்றிய சுகுமார் எந்தவித குற்ற உணர்ச்சி இல்லாமலும், எதுவும் நடக்காததை போலவும் சாதாரணமாக வெளியே சுற்றிக்கொண்டு இருக்கிறார். சமூக வலைதளங்களில் பல பெண்களுடன் ஜாலியாக வீடியோ போட்டு வருகிறார்.
சிறையில் அடைக்க வேண்டும்
நான் தினமும் காவல் நிலையத்திற்க்கு நடையாய் நடந்து கொண்டு இருக்கிறேன். மாம்பலம் மகளிர் காவல் நிலைய போலீசார் மிகவும் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டு வருகின்றனர். காதல் சுகுமாரை போலீசார் உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தக்க தண்டனை பெற்று தர வேண்டும்" என்று புகாரில் துணை நடிகை தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7









