இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா 2 - தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் திரையிடப்பட்டது. அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தை பார்த்தார். நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் காண்பதற்காக அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலில் இளம் பெண் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இவரது எட்டு வயது மகன் தலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பார்க்க இவரது வீட்டின் முன்பு ஏராளமான திரை நட்சத்திரங்கள் குவிந்தனர். அதுமட்டுமல்லாமல், அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக ராஷ்மிகா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் 14 நாட்கள் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுவன் மூளைச்சாவடைந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மூன்று மணிநேரம் சிறையில் இருந்த அல்லு அர்ஜுனை பார்க்க குவிந்த திரைப்பிரபலங்களில் ஒருவர் கூட இந்த சிறுவனை பார்க்க செல்லவில்லை என்று சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலர் சாடி வருகின்றனர்.
LIVE 24 X 7









