மிக நீண்ட நாட்களாக நடைப்பெற்று வந்த படப்பிடிப்பு பணிகள் நிறைவுற்ற நிலையில், தற்போது படத்தினை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது படத்தயாரிப்புக்குழு. அந்த வகையில், இன்றைய தினம் மாரீசன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
வடிவேலு ஒரு Alzheimer பேஷன்ட் என டிரைலரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரிடம் பெரும் பணம் இருப்பதை ஒரு ஏ.டி.எம்மில் இருக்கும்போது பகத் பாசில் பார்த்துவிடுகிறார். அவரிடம் இருந்து பணத்தை அபகரிக்கத் திட்டமிடுகிறார். இதற்காக அவரோடு பயணித்து, இணக்கமாக உரையாடி அந்தப் பணத்தை எடுக்க முயல்கிறார். இறுதியில் என்னதான் ஆனது என ட்விஸ்ட் வைத்துள்ளார்கள் டிரைலரில்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில் அதனைத் தொடர்ந்து யுவன் இசையில் சிங்கிள் டிராக் பாடலும் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வடிவேலு பெரும்பாலான படங்களில் நடித்திருந்தாலும், உணர்ச்சி பொங்கும் எமோஷனல் நிறைந்த கதாபாத்திரங்களிலும் பின்னி பெடல் எடுப்பார் என்பது ஊர் அறிந்ததே. தனது இரண்டாவது இன்னிங்ஸில் மாமன்னன் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த நிலையில், வடிவேலுவினை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டியுள்ளது மாரீசன் திரைப்படத்தின் டிரைலர்.
இப்படம் வருகிற வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









