‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 1) உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்து குமுதம் இதழுக்கு தர்ஷன் வழங்கிய சிறப்பு நேர்காணலின் விவரங்கள் பின்வருமாறு.
’ஹவுஸ்மேட்ஸ்’ கதையைக் கேட்கும்போது என்ன தோணுச்சு?
"ரொம்ப விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்துச்சு. வழக்கமான ஹாரர் படங்கள் மாதிரி இல்லாம, யுனிக்கான ஒரு விஷயத்தோட இருந்த அந்த ஐடியாவே ரொம்ப சூப்பரா இருந்துச்சு. படம் பார்க்குற ஆடியன்ஸுக்கும் விறுவிறுப்பா இருக்கும்னு நம்புறேன். ஏன்னா, இதுவரைக்கும் இந்தப் படத்தைப் பார்த்த எல்லாருக்குமே பிடிச்சுப்போச்சு."
படத்தோட கதை என்னனு தெரிஞ்சிக்கலாமா?
"கல்யாணமான புதுத் தம்பதிகள், புதுசா ஒரு வீட்டுக்கு குடிவருவாங்க. கணவன் வேலைக்குப்போக, வீட்டு வேலையெல்லாம் மனைவி பார்ப்பாங்க. அப்படி அவங்க பார்க்குற தேவை இல்லாத வேலை ஒண்ணு, ஒரு பிரச்னையைக் கொண்டுவரும். அதுக்குப் பிறகு என்னென்ன விஷயங்கள் நடக்குது அப்படிங்கிறதுதான் கதை. மிடில் கிளாஸ் அபார்ட்மென்ட்ல நடக்குற கதை இது. தண்ணீர் பிரச்னை, பார்க்கிங் பிரச்னைனு அங்க ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும். அந்த மாதிரி ஒரு அபார்ட்மென்ட்ல குடியிருக்குற ரெண்டு குடும்பத்துக்குள்ள என்னென்ன நடக்குது அப்படிங்கிறதை, ரொம்பவே சுவாரசியமா சொல்லியிருக்கார், இயக்குநர் டி.ராஜவேல். இந்தப் படம், விஷுவலா பார்க்கும்போது ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். அதனாலதான், படம் பற்றி இப்பவே நிறைய விஷயங்களைச் சொல்ல முடியல."
சிவகார்த்திகேயன் எப்படி இந்தப் படத்துக்குள்ள வந்தார்?
"நான் ஒரு படம் பண்றேன்னா, உடனே சிவகார்த்திகேயன் அண்ணாவுக்குத் தெரிஞ்சிடும். நானே போய் அவர்கிட்ட சொல்லிடுவேன். அப்படி, இந்தப் படத்தோட கதையைக் கேட்ட பிறகு, 'இப்படி ஒரு கதை கேட்டேன் அண்ணா. நான் ஓகே சொல்லப்போறேன்'னு சொன்னேன். 'படத்தோட ஐடியா என்ன?'னு அவர் கேட்டதுமே, கதையை அவர்கிட்ட சொல்லிட்டேன். அதனால, படம் இந்த மாதிரிதான் இருக்கப்போகுதுனு அப்பவே அவருக்கு ஓர் அனுமானம் இருந்துச்சு. அதனால, படம் முழுசா தயாரான பிறகு நான் பார்க்குறேன்னு சொன்னார்.
அதேமாதிரி, படம் பார்க்கும்போதே அவருக்கு அந்த ஐடியா ரொம்ப பிடிச்சுப்போச்சு. படம் இடைவேளை விட்டதும், அடுத்து இப்படி நடக்குமா, அப்படி நடக்குமானு பல விஷயங்களை கெஸ் பண்ணி சொன்னார். ஆனாலும், படத்துல நாங்க சொன்ன விஷயத்தை அவரால கெஸ் பண்ண முடியல. படம் முடிஞ்சதும், 'நான் கெஸ் பண்ணது மாதிரி படம் முடியல. வேற மாதிரி முடிஞ்சிருக்கு'னு பாராட்டுனார்.
அவரோட பாராட்டையும் ஆச்சரியத்தையும் பார்த்துதான், 'நீங்க இந்தப் படத்தை வழங்க (presents) முடியுமா?'னு தயாரிப்பாளர்கள் கேட்டாங்க. அவரும் சந்தோஷமா ஒத்துக்கிட்டார்."
உங்க கெரியரோட ஆரம்பத்துல இருந்து சிவகார்த்திகேயன் இருக்கார். அவரை நீங்க எப்படி பார்க்குறீங்க?
"ஃப்ரெண்ட், ஃபேமிலி, வழிகாட்டினு எனக்கு எல்லாமே அண்ணாதான். அவர் இல்லனா நான் இந்த இடத்துல இருந்திருப்பேனானு எனக்கே தெரியல. அவர் கொடுத்த ஆதரவும் வழிகாட்டுதலும் ரொம்பப் பெருசு. அவர் மாதிரி யாருமே ஊக்கப்படுத்த மாட்டாங்க. அவர் என் வாழ்க்கையில வந்தது, எனக்குக் கிடைச்ச வரம்னுதான் சொல்வேன்” என்றார்.
(கட்டுரை: சி.காவேரி மாணிக்கம்/ குமுதம் / 06.08.2025)
LIVE 24 X 7









