Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

By nagalekshmi
26 Dec 2024, 08:42 AM
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவரும், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்கி படித்து வந்துள்ளனர். கடந்த 23-ஆம் தேதி இரவு இருவரும் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுற்றுத்தியோடு அந்த மாணவியிடம் பாலியன் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அந்த மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பல கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூபுரத்தை சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில், உள்ள நிலையில், குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வரும் ஞானசேகரன், தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணிக் கடை விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு செல்வதும், அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனை காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு  இடது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவலில் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள குற்றவாளிகள் சிகிச்சை பிரிவில் (Convict Ward) சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளார்.

இவர் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் குற்றவாளிகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து ஞானசேகரன், புழல் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஞானசேகரன், திமுக பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக இருப்பதாக கூறப்படுகிறது.