Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாமக.. செளமியா அன்புமணி அதிரடி கைது

By nagalekshmi
02 Jan 2025, 11:09 AM
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில்  ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளியான ஞானசேகரன் திமுக கட்சியைச் சேர்ந்தவர் என்று பல கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக-வினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். 

மேலும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக,  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், காவல்துறை சார்பில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், தடையை மீறி பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதனால் வள்ளுவர் கோட்டம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற செளமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக போராட்டம் நடத்திய பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.