தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடிய நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் நகராட்சி, நிர்வாகம், பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், விதி எண் 110 கீழ் முதலமைச்சர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் முதற்கட்டமாக 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் இது பொங்கல் தினத்தன்று தொடங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டம்
போர் சூழல் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் விஜய், பொங்கல் பண்டிகை முதல் ‘அன்னப்பூரணி சூப்பர் 6’ திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். வரும் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும், இதற்காக ஆண்டுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 1,30,16,104 குடும்பங்கள் பயன்பெறுவார்கள். மேலும், எரிவாயு சிலிண்டருக்கான தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
அக்டோபர் 2 முதல் ‘வெற்றிப்பயணம்’ திட்டம் விரிவாக்கம்
மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டமான வெற்றிப்பயணம் திட்டம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இலவச மகளிர் பயணம் திட்டம் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் போது தற்போது அதனை விரிவடையும் செய்யும் நோக்கில் முதலமைச்சர் விஜய் மாநகரங்கள் மற்றும் நகரங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம். மேலும் மகளிருக்கான வெற்றிப்பயணம் திட்டத்திற்கு வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாது என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டத்தின் மூலம் திருநர், திருநங்கையர்களும் இந்த கட்டணமில்லா பயணம் திட்டத்தின் மூலம் பயனடைலாம் என்றும் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் வெளியிட்ட இந்த அறிவிப்புகள் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.