அரசியல்

"டம்மி முதல்வரே... மிக்சர் சாப்பிடாம நடவடிக்கை எடுங்க" - உதயநிதி சாடல்!

By Sumalekha
29 Sep 2026, 04:30 PM
தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு எந்த அளவில் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து நடைபெறும் இந்தக் கொலைச் சம்பவங்களால் மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் கொலைச் சம்பவங்கள் மூலம் சட்டம் ஒழுங்கு எதை நோக்கிச் செல்கிறது? முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,

”பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் - என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்? திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது. குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.

இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம் - கன்னியாகுமரி - தேனி கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன. இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?

இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.